"அகரம்" மாணவியின் அனுபவம்.. கண்கலங்கிய சூர்யா..!
Published : Jan 06, 2020 6:51 AM
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மாணவி ஒருவர், தனது கல்வி கனவு நனவாக தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்ததைக் கேட்டு மேடையிலிருந்த நடிகர் சூர்யா, அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கண்கலங்கினர்.
சமுதாயத்தின் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்குத் தரமான கல்வியை கொடுக்கும் நோக்கத்தில் அகரம் அறக்கட்டளையை நடிகர் சூர்யா நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சென்னை தியாகராயநகரில், அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில், எழுத்தாளர் சா.மாடசாமி எழுதிய "வித்தியாசம்தான் அழகு" என்ற நூலையும், உலகம் பிறந்தது நமக்காக என்ற வாழ்க்கைத்திறன் பயிற்சி கையேட்டையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார்.
அப்போது, அகரம் அறக்கட்டளை மூலம், தனது கல்வி கனவு நனவானதை, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் விவரித்தார். மிகவும் ஏழ்மையான சூழலில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தையை இழந்து, தாயாரின் ஒற்றை தினக்கூலியில் வாழ்க்கையை நகர்த்தி, அகரம் அறக்கட்டளை மூலம் படித்து, வேலைவாய்ப்பு கிடைத்த வரையில், தாம் பட்ட கஷ்டங்களை அந்த மாணவி விவரித்தார்...
அப்போது, நடிகர் சூர்யா, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் கண்கலங்கினர்....
பின்னர், நடிகர் சூர்யா எழுந்து சென்று மாணவியை அரவணைத்து ஆறுதல் கூறினார்.
மடைதிறந்த வெள்ளம்போல், மாணவி தன் அனுபவத்தை விவரித்த நிகழ்வு, காண்போரையும் கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்திருந்தது.
விழாவில் பேசிய நடிகர் சூர்யா, மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள 100 அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அகரம் மூலம் படித்தவர்களை கொண்டு, அவற்றை மேம்படுத்தும் திட்டம் உள்ளதாகவும், அதற்கு "இணை" என பெயர் சூட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p